புத்தளத்தில் டீசலுக்கும், பெற்றோலுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றன.
இலங்கையில் கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கியதற்கு பின்னர் பெட்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு என்பனவற்றின் விலை அதிகரித்துவருகிறது.
புத்தளம், முந்தல் , கற்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஒருவாரமாக டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன், தனியார் மற்றும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ” டீசல் இல்லை” என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் புத்தளத்தில் பெற்றோலுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
புத்தளம், முந்தல் மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலும் இல்லை, பெற்றோலும் இல்லை என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டுள்ளதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்சன் 95 சுப்பர் பெற்றோல் மாத்திரம் விநியோகிக்கப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
பல பில்லியன் நஷ்டத்தில் எரிபொருள் விநியோகம் செய்து வருவதால், எரிபொருள் விலையை அதிகரிக்க நிதி அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, டீசலிக்கும், பெற்றோலுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை விலை அதிகரிப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.