உடம்பில் இருந்து கொண்டு காதை கடிக்கும் கூட்டணிக் கட்சிகள்! – திலும் குற்றச்சாட்டு

அரசியல் ரீதியாக அநாதரவாக இருந்த சில கூட்டணிக் கட்சிகள், பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த பின் தற்போது உடலில் இருந்துக்கொண்டு காதை கடிப்பது போல், அரசாங்கத்திற்குள் அங்கம் வகித்துக்கொண்டு, அரசாங்கத்தையே விமர்சித்து வருகின்றன என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செங்கடகல தொகுதியின் பெண்கள் பிரிவின் கூட்டம் கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனாத் தொற்று நோய் காரணமாக அரசாங்கம் எதிர்நோக்கிய சவால்கள், பிரச்சினைகளை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தில் இருக்கும் சில கூட்டணிக் கட்சிகள் தமது கட்சியை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அது உடம்பில் இருந்து கொண்டு காதை கடிப்பதற்கு இணையானது.

இயற்கை பசளையை நாட்டில் பிரபலப்படுத்துவதற்காக உண்மையான நோக்கத்துடன் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் போது நாட்டில் பசளை பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிலர் தமது கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

இது அரசாங்கத்தின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய தடை. அரசாங்கத்தில் அங்கம் வகித்தால், அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்பை காப்பற்ற வேண்டும். கோவிட் தொற்று நோய் காரணமாக நாட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

டொலர் தட்டுப்பாட்டுடன் எரிபொருள் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால், மின்சார துண்டிக்க வேண்டியேற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விமர்சனங்களை முன்வைத்து வரும் அரசாங்கத்திற்குள் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் தமது கட்சிகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

நெருக்கடியை பயன்படுத்தி கரையேற முயற்சித்து வருகின்றனர். இது தவறு. இவர்கள் செய்வதை அறிந்தும் நாங்கள் அமைதியாக இருக்கின்றோம் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *