ஈஸ்டர் தாக்குதல்: நீதி கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்! கர்தினால்

நல்லாட்சியின் போது வெடித்த உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கையின் கத்தோலிக்க தலைமைத்துவம், அதே இலக்கை அடைய வேறு ஒரு அரசாங்கத்தை நியமிக்க எதிர்பார்த்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அடுத்த அரசாங்கத்திடம் அல்லது எதிர்பார்த்த நீதி கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதை நாம் தெளிவுபடுத்துகின்றோம்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் 855 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் அரசாங்கத்திற்கு பேராயர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், எங்கள் மக்களை அமைதிப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதும் எங்கள் கையில் இருந்ததால், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம்.

அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருந்தால் இலங்கையில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாகியிருக்கும். நாங்கள் மதத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாலும், எங்களது மத நம்பிக்கையாலும், தாக்குதல் நடத்துவது சரியான நடவடிக்கையல்ல என்பதாலும் அந்த நிலைமையை நாம் சமாளித்தோம்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு புலனாய்வு அதிகாரிகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் காவல்துறை உதவும் என நம்பியிருந்தது, ஆனால் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின்னரும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் நேரடியாக முஸ்லிம் தீவிரவாதிகள் இருந்தபோதிலும், உளவுத்துறை அதிகாரிகளும், சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளும் தாக்குதல் நடப்பதை நன்கு அறிந்திருந்தனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. குறிப்பாக அரச தலைவர் ஆணைக்குழுவின் அறிக்கையில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர்கள் தாக்குதல் குறித்து அறிந்திருந்தும், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு அறிக்கை கூறினாலும், சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறான நடத்தை நியாயத்தை நிலைநாட்ட முடியாது என்ற உணர்வை உருவாக்கியுள்ளது. அதற்காக நான் வருந்துகின்றேன்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் காவல்துறை மா அதிபரும் விடுதலை செய்யப்பட்டமைக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முன்னாள் போதகர் ஆசிரி பி பெரோரா, இந்தத் தீர்மானம் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கவில்லை.- என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதற்காக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கர்தினால் ரஞ்சித் தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *