கீரிமலையில் நில அளவை திணைக்களத்தினரின் திருட்டு நடவடிக்கை…!ஆபத்தான சமிக்ஞை…! சட்டத்தரணி சுகாஸ் எச்சரிக்கை…!

கீரிமலைப் பகுதியில் திருடர்கள் திருட வருவதைப் போல் நில அளவை திணைக்களம் காணியை சுவீகரிப்பதற்கு வருகை தந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணிமான கனகரத்தினம் சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த பகுதியில் நிலசுவீகரிப்பு நடவடிக்கைக்காக  இன்று(05) காலை வருகை தந்த நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், மக்களுக்கும் அறிவித்தல்கள் எவையும் வழங்கப்படாமல், திருடர்கள் திருட வருவது போல திடீரென்று இன்றையதினம் கிரிமலையில் காணி சுவீகரிப்பு ஒன்று நடைபெற இருப்பதாக எமக்கு நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு மக்களுடன் விரைந்த நாம், போராடி அந்த காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்தி இருக்கின்றோம். இதனை நாங்கள் ஒரு ஆபத்தான சமிக்ஞையாக பார்க்கின்றோம்.

இதுவரை காலமும் மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தலை வழங்கி விட்டு, காலை சுவீகரிப்பிற்கு வந்தவர்கள் தற்போது திருடர்கள் திருட வருவது போல மிகவும் இரகசியமாக காணிகளை சுவீகரிக்க வந்திருப்பதை ஆபத்தான விடயமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

எம்மை பொறுத்தவரையில் காணிகளினுடைய உரிமையாளர்களான தமிழ் மக்களுடைய நிலைப்பாடு தான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கிறது.

எந்த வகையில் காணிகளை சுவீகரிப்பதற்கு வந்தாலும் நாங்கள் அவற்றை அனுமதிக்கப்போவது கிடையாது.

இது எமது தாயக பூமி. சகல தனியார் பொது மக்களுடைய காணிகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் குடியிருப்பதற்கு அனுமதிக்கப்படுகின்ற வரை எந்த நோக்கத்திற்காகவும் அளவீடு செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *