ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக, இலங்கை வாழ் இந்துக்கள் சார்பாக மனோ கணேசனை முன்மொழிகிறது – மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவிப்பு

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை இலங்கை வாழ் இந்துக்கள் சார்பாக சிவசேனை அமைப்பு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பளராக முன்மொழிவதாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 

தேர்தல்கள் வர இருக்கின்றன, தொடர்சியாக தேர்தல்கள் வர இருக்கின்றன அல்லது ஒரே நேரத்தில் வர இருக்கின்றன.தேர்தலைக்கடக்காமல் இந்த ஆண்டு கடக்காது. தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தேர்தலில் பங்கேற்பதா? வேண்டாமா? என்று ஒரு வினா உள்ளது.  யார் சைவ சமயத்தினைச் சேர்தவர்கள், இலங்கை வாழ் இந்துக்கள். ஏறக்குறைய 25லட்சம் இந்துக்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏறக்குறைய 17, 18 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றோம். இவர்கள் தமது எதிர்காலத்திற்காக தேர்தலில் பங்குபற்றி தீர்மானிப்பதா? அல்லது பங்கு பற்றாமல் தீர்மானிப்பதா? என்ற கேள்வி எழுகின்றது. பங்குபற்றி தீர்மானிப்பதாக இருந்தால்  ஜனாதிபதித் தேர்தலை எப்படிச் சந்திப்பது, நாடாளுமன்றத் தேர்தலை எப்படிச் சந்திப்பது. உள்ளுராட்சித், கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களை எப்படிச் சந்திப்பது பல தேர்தல்கள் நடக்கின்றது. சைவர்கள் இந்துக்களுக்கு தேர்தல்களில் இடம்கொடுப்பதில்லை.

செட்டிகுளத்தினை எடுத்துக் கொள்ளுங்கள்  செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் 18 ஆயிரம் சைவர்கள், 2000 கிறீஸ்தவர்கள், 7000 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஆயினும் அங்குள்ள சங்கங்களை எடுத்துக்கொண்டால் கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தான் தலைவர்களாக இருக்கின்றனர். சைவர்களை தலைமைக்கு விடுவதே இல்லை. கேட்டால் நீங்கள் பாம்பையும், வேம்பையும் வழிபடுபவர்கள் அறிவு குறைந்தவர்கள், மூடநம்பிக்கைகள் உடையவர்கள், ஆட்சியில் பங்கு கொள்ளத் தெரியாதவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள் யார் இப்படிச் சொல்வது என்றால் வந்தேரிகள் தான். அந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக தேர்தலை சந்திப்பவர்களுக்காக சொல்லிக்கொள்கின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் இந்துக்களுக்காக ஒரு பொது வேட்பாளர் வேண்டும். இலங்கையில் வாழ்கின்ற ஏறக்குறைய 25லட்சம் இந்துக்களுக்கு ஒரு பொது வேட்பாளர் வேண்டும்.

இந்துக்களில் அரைவாசிப்பேர் இன்று வடக்குக் கிழக்குக்கு வெளியிலே தான் இருக்கின்றார்கள். மேற்கு மாகாணத்தில் ஆராச்சிக்கட்டுப் பிரதேசத்தில் அங்குள்ள பிரதேச சபையில் தலைவராக இருப்பவர் தட்சனாமூர்த்தி என்னும் சைவ சமயத்னைச் சேர்ந்தவர். ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் பத்தாயிரம் மக்கள் சைவர்கள். மீதி நாற்பதாயிரம் வாக்காளர்கள் பௌத்தமதத்தினைச் சேர்ந்தவர்கள் ஆனால் அவர்கள் ஆராச்சிக்கட்டில் நல்லிணக்கத்துடன் சிறுபான்மையாக இருந்தாலும் ஆட்சியில் இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள். இந்த கொள்ளை மற்றைய பிரதேசத்தில் இல்லை. 

இந்த நல்லிணக்கத்தினை இலங்கை முழுவதும் ஏற்படுத்த வேண்டும். இந்துக்களுக்குரிய இடத்தினை இந்துக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். சைவர்களுக்குரிய இடத்தினை சைவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு பொது வேட்பாளரை நாம் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும். அதற்கு நல்லிணக்கம் வேண்டும் மானிப்பாயில் ஒருவரும், உடுவிலில் ஒருவரும், சுன்னாகத்தில் ஒருவரும், மாவிட்ட புரத்தில் ஒருவர் என்று, இந்த நான்கு பேரும் இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை கொண்டுவர முடியாது. ஏனென்றால் இந்துக்கள் நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றார்கள் . வடக்கு கிழக்கிற்கு வெளியே பெரும்பான்மையான இந்துக்கள் இருக்கும் போது அங்கிருந்துதான் பொது வேட்பாளர் கொண்டு வரவேண்டும். நாம் இவ்வளவு காலமும் செய்த மிகப் பெரிய தவறு மலையகத் தமிழர்களை விட்டுவிட்டு இவ்வளவு காலமும் அரசியல் செய்தது. நான் பலருடன் கலந்து ஆலோசித்ததன் பிரகாரம் பலரால் மனோகணேசன்தான்    பொது வேட்பாளருக்கு பொருத்தமான நபர் என தெரிவிக்கின்றனர்.

வடக்குக் கிழக்குக்கு வெளியேயும் உள்ளேயும் இந்துக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்ற ஒரே ஒரு நபர் மனோ கணேசன்தான். அவருக்கு கிறீஸ்தவ பின்னணி  இருக்கலாம், சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், இந்துக்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றால் மனோ கணேசன்தான். ஆகவே இந்துக்களுக்கான சிவசேனை அமைப்பாகிய நாம் மனோ கணேசனை பொது வேட்பாளராக முன்மொழிகின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *