தாய்நிலத்தை ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளை தமிழ்மக்கள் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம்…! யாழ்.பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு…!

தாய்நிலத்தை ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சுதந்திர காற்றை நீங்களாகச் சுவாசிக்க முடியாது. முன்னெடுப்புகள் இல்லாமல் எதையும் சாதித்து விடமுடியாது. இந்தியா ஒரு பெரிய நாடு. எத்தனையோ மொழிகளையும், எல்லைகள் அனைத்திலும் பயங்கரமான பிரச்சினைகளைக் கொண்டதொரு நாடு. ஆனால் அங்கு எல்லாமிருக்கிறது.

தமிழ் மக்கள் தங்கள் பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதற்காக புரட்சிதான் செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லி விட்டு நான் வீட்டுக்குச் செல்லமுடியாது.

யூதர்கள் அல்லது பலஸ்தீனியர்கள் முன்னர் எங்கு கண்டாலும் தங்களின் அடுத்த சந்திப்பு ஜெருசலேமில் என்று கைதட்டுவார்கள். 

நாங்கள் எங்களின் அடுத்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று கைதட்டுகின்றோமா? தற்போது தேசியம் கதைக்கிறவர்கள் ஆசியாவிலேயே பிஸியானவர்கள். வாழ்வதோ கொழும்பில். லண்டன் குடியுரிமையும் கொண்டுள்ள அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற சிறப்புரிமையையும் கொண்டுள்ளனர்.

பலஸ்தீனம் போன்று எமது மண் பறிபோகவில்லை. நாங்கள் தற்போது பலஸ்தீனியர்கள் போன்று அகதி முகாம்களில் இருக்கவில்லை. எங்கள் தாய்நிலத்தைப் பாது காப்பதற்கான போதிய அறிவு எம் மத்தியிலுள்ளது. 

ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் புரிந்துணர்வுப் பண்பு ஒவ்வொருவருக்கும் தேவையானதொன்று. ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *