
கொழும்பு, பெப் 23: நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு, ஜெனீவா அமைர்வை சாக்காக பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “நாட்டில் ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தங்கள், பேச்சுரிமைக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் சுமத்தப்படுகின்றன.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் இல்லம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தாக்குதலை நடத்திய குழுவினர், பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தை உன்னிப்பாக அவதானித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லாது இருப்பதைக் காட்டுகிறது.
அரசை விமர்சிக்கும் கருத்துக்கள் எழும்போதெல்லாம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நடைபெறும் விசாரணையை ஒரு சாக்காக வைத்து அரசு தப்பிக்க முயல்கிறது. நாங்கள் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் இல்லை. தேசபக்தர்கள் என்று சொல்லப்படும் அரசாங்கத்தின் நிலையை இப்போது பார்க்கலாம். நாட்டைக் காக்க டாலர்களோ, எரிபொருளோ இல்லை. உயர்தரப் பரீட்சையின் போது அரசாங்கத்தால் மின்சாரம் கூட சரியாக வழங்க முடியவில்லை. எனவே, எல்லா குறைகளில் இருந்தும் அரசைட் காப்பாற்றிக் கொள்ள ஜெனீவாவை ஒரு சாக்காகப் பயன்படுத்த வேண்டாம்” என்று அவர் தெரிவித்தார்.