
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் உணவு பஞ்சத்தை சமாளிப்பதற்கு இந்தியாவின் உதவிக்கு பாக்கிஸ்தான் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு கிழக்கே உள்ள இந்திய எல்லைப் பகுதியான அட்டாரியில் இருந்து 50,000 மெட்ரிக் தொன் எடையுள்ள கோதுமையினை சுமார் 50 வாகனங்களில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கும் நல்லெண்ண செயற்பாட்டில் இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்லா மற்றும் இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரான ஃபரித் மாமுண்ட்சாய் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியாவின் இச்செயற்பாட்டிற்கு பாக்கிஸ்தான் அனுமதி கொடுத்திருக்கின்றமையானது பல சாதகமான பாதைகளை எதிர் காலத்தில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் திறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் வடமேற்கு அண்டை நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் ஆயுதக் குழுவால் கைப்பற்றப்பட்டதில் இருந்து நாட்டின் பொருளாதாரம் கிட்டத்தட்ட முழுமையான சரிவைச் சந்தித்து வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது. 2001 முதல் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.