வடக்கில் நாளை பெருமெடுப்பில் மே தின நிகழ்வுகள்! – தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடு

சர்வதேச தொழிலாளர் தினத்தை வடக்கில் நாளை பெருமெடுப்பில் கொண்டாடுவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. 

மே தினத்தை அலங்கரிக்கும் வண்ணம் ஊர்வலங்களும், பிரதான மேடை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு நாளை காலை 9 மணிக்கு யாழ். மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு நாளை பிற்பகல் 3 மணிக்கு வவுனியா, குருமன்காடு, கலைமகள் விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மே தினம் நாளை பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணம், கொக்குவில் – பொற்பதி வீதியில் அமைந்துள்ள பொற்பதி அறிவாலய மண்டபத்தில் ( பொற்பதிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில்) நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த உலகத் தொழிலாளர் தின நிகழ்வில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மே தினத்தைச் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பே உழைப்புக்கான உத்தரவாதம்’ என்ற கருப்பொருளில் செம்பசுமை மே தினமாகக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மே தின நிகழ்வு பருத்தித்துறை கூட்டுறவு மண்டபத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *