யாழ்.புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடு…! நிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணி…!

யாழ் புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் மதியமளவில் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.

இதனையடுத்து குறித்த கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி , அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை பார்வையிட்ட நீதவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள்  நிறைவுக்கு வந்ததுடன் மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *