
கொழும்பு, பெப் 23: இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடைபெறவில்லை என்றும், தமிழ் மக்களுக்கு இலங்கை ராணுவத்தினர் அழிவினை ஏற்படுத்தினார்கள் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் “
இலங்கையில் இனவழிப்பு நடந்ததாக மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார். அது தவறாகும். தமிழர்களுக்கு எதிராக ராணுவத்தினர் எந்த அழிவையும் மேற்கொள்ளவில்லை.
அவ்வாறு மேற்கொண்டிருந்தால், யுத்தம் நிறைவடைந்த ஒரு வருடத்திலேயே நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதியான எனக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகளை விட அதிகமான வாக்குகளை தமிழ் மக்கள் அளித்திருக்க மாட்டார்கள்.
இதன்மூலம், தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவத்தினர் செயற்பட்டனர் என்ற கருத்தைத் தமிழ் மக்கள் நம்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.





