
வடக்கு மாகாணத்துக்குத் தேவையான எரிபொருள் போதியளவில் கையிருப்பில் உள்ளது. அதனைவிட காங்கேசன்துறையிலுள்ள சேமிப்புக் களஞ்சியத்திலும் எரிபொருள் உள்ளது.
தொடர்ச்சியாக வடக்குக்கான எரிபொருள் பவுஸர்களும் வருகின்றன. எனவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வீணாக வரிசையில் நிற்கவேண்டாம் =என்று, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பிச் சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில்கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
’வடக்குக்கான எரிபொருள் விநியோகத்தில் இதுவரை எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை. எமக்கான எரிபொருள் ஏற்றிய பவுஸர்கள் தென்னிலங்கையிலிருந்து இரவு 10 மணியளவில் புறப்பட்டால் யாழ்ப்பாணத்தை வந்தடைய மதியம் 12 மணியாகும்.
அதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். அதுவும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மாத்திரம்தான் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் எரிபொருள் பவுஸர் வந்ததும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களாலும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. போதுமானளவு எரிபொருள் வடக்கில் கையிருப்பில் உள்ளதால் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று நேரத்தை வீணாக்க வேண்டாம்’= என்றார் அந்த உயர் அதிகாரி.





