
மன்னார் மாவட்டத்தில் ஒமிக்ரோன் தொற்றால் மூவர் உயிரிழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் மன்னார் மாவட்டத்தில் 14 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்ட மூவர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிப்பதுடன், பூஸ்டர் தடுப்பபூசிகளை ஏற்றித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றவர்களில் 55.5 வீதமானோர் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியை 70 தொடக்கம் 75 வீதமானவர்கள் ஏற்றிக்கொண்டால் மட்டுமே, தொற்றின் சங்கிலியை எம்மால் உடைக்க முடியும்.
பாடசாலை மாணவர்களில் இதுவரை 12 ஆயிரத்து 649 பேர் முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர். 16 தொடக்கம் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் முதலாம் திகதி மகா சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறவுள்ளன. அதற்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டிருக்க வேண்டும். பூரணமாகத் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்பது, ஒருவர் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றி இரு வாரங்கள் கழிந்திருக்க வேண்டும்.
இரண்டாவது தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்களுக்கு மேற்பட்டிருந்தால் கட்டாயம் மூன்றாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் இந்த ஆண்டு 689 கொரோனாத் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 872 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 39 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.- என்றார்.





