வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்கள், அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – தென்பகுதியில் பேரவலம்

கொட்டித் தீர்க்கும் மழையால் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 11 கிராம உத்தியோகத்தர் பிரதேசங்களில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அவிசாவளை புவக்பிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் அதே பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்கம தொடக்கம் அவிசாவளை வரையான ஹைலெவல் வீதியின் வெள்ளம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புவக்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மண் சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் ஆரியவன்ச கண்டம்பி தெரிவித்தார்.

முலட்டியன தெனகம பல்லவல பிரதேசத்தில் சமரப்புளி ஹேவல பகுதியைச் சேர்ந்த கசுன் சதமல் (27) மற்றும் பிடல்கமுவ ஹேவல ஹேவா ஹகுருவைச் சேர்ந்த நுவான் சமீர (20) என்ற இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இது தவிர அக்குரஸ்ஸ பிரதேச செயலகப் பிரிவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளனர். இரண்டு விபத்துக்களிலும் காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவ சிகிச்சைக்காக கராப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக லெப்.கேணல் ஆரியவன்ச தெரிவித்தார்.

இதேவேளை நில்வள ஆற்றின் மேல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்ட அனர்த்த குழு இன்று(02) மாலை மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,  நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க, மாத்தறை அரச அதிபர் கணேச அமரசிங்க  உட்பட பெருமளவிலான அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அங்கு வெள்ளச் சூழலை எதிர்கொள்ள தேவையான பல முடிவுகள் எடுக்கப்பட்டதுடன், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *