உக்ரைன் மீது தாக்குதல் என்பது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று நேட்டோ பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் பொறுப்பற்ற தாக்குதலுக்கு நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது “எண்ணற்ற பொதுமக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ரஸ்யாவின் “ஆக்கிரமிப்புக்கு” தீர்வு காண நேட்டோ நட்பு நாடுகள் சந்திக்கவுள்ளதாக என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவின் இந்த படையெடுப்பு, அமெரிக்காவின் பலவீனத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதன் “பலவீனத்தால்” ரஷ்யாவின் இந்த படையெடுப்பு ஓரளவு தூண்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு உக்ரைனில் உள்ள போர் மண்டலத்தில் உள்ள யுக்ரேனிய வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்புமாறு புடின் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து ரஸ்யாவின் படையெடுப்பு “ஐரோப்பிய கண்டத்தில் ஒரு பெரிய போரின் ஆரம்பமாக இருக்கலாம்” என்று உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்;.
நாட்டு மக்களுக்கு நள்ளிரவு வேளையில் உரையாற்றிய அவர், ரஸ்யா தாக்குதல் நடத்தினால், “நாங்கள் நம்மை தற்காத்துக்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகள், யுக்ரேனியப் படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க ரஸ்யாவிடம் உதவி கேட்டுள்ளதாக கிரெம்ளின் கூறியிருந்தது.
இதனையடுத்து இந்தக் கோரிக்கை ரஸ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கான சாக்குப்போக்காக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்
அதேநேரம் ஒரு பெரிய அளவிலான படையெடுப்பிற்கு ரஸ்யா, இப்போது இராணுவ ரீதியாக முழுமையாக தயாராகிவிட்டதாக மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் தெரிவித்திருந்தார்
இந்தநிலையில் யுக்ரெய்ன் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் ரஸ்ய ஜனாதிபதி புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை என்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கை மூலம், யுக்ரேனிய மக்கள் நாட்டை நடத்துபவர்களை “சுதந்திரமாக தேர்ந்தெடுக்க” முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..
இதற்கிடையில் உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரஸ்யாவின் “படையெடுப்பு தொடங்கிவிட்டது.” என்று அறிவித்துள்ளார்.
தமது நாடு, தம்மை பாதுகாத்துக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு
ரஸ்யாவின் இராணுவப் படைகளின் உக்ரைன் மீதான தாக்குதல், நியாயமற்ற தாக்குதல்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
“உலகின் பிரார்த்தனைகள் உக்ரைன் மக்களுடன் உள்ளன” என்று அவர் கூறியுள்ளார். ரஸ்ய ஜனாதிபதி புடின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார், அது பேரழிவுகரமான உயிர் இழப்பு மற்றும் மனித துன்பங்களைக் கொண்டுவரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த தாக்குதல் கொண்டு வரும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஸ்யா மட்டுமே பொறுப்பாகும், இந்தநிலையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்டு தீர்க்கமான முறையில் செயற்படவுள்ளதாக பைடன் குறிப்பிட்டுள்ளார்;
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, உக்ரெய்ன் தலைநகர் கீவ் பகுதியில் 5 அல்லது 6 பாரிய வெடிப்பு சத்தங்களை கேட்க முடிந்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






