கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் தனியார் பேருந்தை பின்னால் வந்த அரச பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இன்று (06)காலை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரச பேருந்து மோதியுள்ளது.
குறித்த விபத்தானது திட்டமிட்டு இடம்பெற்றுள்ளதாக பயணிகளால் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அரச பேருந்தும் தனியார் பேருந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் புறப்பட்டு வருவதால்,
இருவருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேருந்தை அரச பேருந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இரு பேருந்துகளின் உடைந்த கண்ணாடி துண்டுகள் கிடந்ததாகவும், பாடசாலை மாணவர்கள் அதிகம் நிற்கும் இடம் அதனால் துப்பரவு செய்து செல்லுமாறு கரந்தாய் கிராம மக்களால் தெரிவிக்கப்பட்ட போது,
அரச பேரூந்து உத்தியோகத்தர் ஒருவர் தரக்குறைவாக மக்களுக்கு பதிலளித்துள்ளதுடன், தம்மால் அதனை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.