வெளிநாடுகளில் இருந்து யாழிற்கு வருகை தருவோர், கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குறித்த தகவலை யாழ்ப்பாண மாவட்ட மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
அதிலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபா வரையிலான பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த வெளிநாட்டு நுழைவுவிசா மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும், விழிப்பாகவும் இருப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.