இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் – பிரதமர் மோடியிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை  பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விட உள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரையின்  293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று(10) சந்தித்து பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை  கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மனவருத்தமாக  உள்ளது.

வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவை  மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும்.

ஆகவே கச்சத்தீவு மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களை  பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். கச்சத்தீவு மீட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் முடிவு சரியானதாக உள்ளது. இருந்தபோதிலும்  இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்காக வாக்கு அளித்து இருக்கிறார்களே அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.

இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜ.க. குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.

பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள்.

ஜனநாயக நாட்டில் தோல்வி வெற்றி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும். 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சி புரிந்த காலகட்டத்தில் யாருடைய ஆட்சிகளையும் கலைக்கவில்லை.

இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார், விபூதி பூசி கொள்கிறார். காசி விசுவநாதர் பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார்.

ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன், பா.ஜ.க.விற்காக நான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அ.தி.மு.க. தோல்வியை  தழுவியுள்ளது. அ.தி.மு.க. கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. இந்த தேர்தலில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தமிழகத்தில் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கிறார்கள்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *