வடமாகாணத்தில் தொழில் தேடுபவர்கள் மற்றும் தொழில் வழங்க காத்திருப்போர் தொடர்பிலான தகவல்களை டியிற்றல் தளம் ஒன்றில் பதிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் உப அலுவலகத்தில் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான மாவட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாணத்தில் நிலவும் வேலையில்லா பிரச்சினையை எதிர்கொள்வதற்கு தொழில் வழங்குநர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் அதிகாரிகளுக்கும் ஆளுநருக்கும் இடையில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றது.
இதன்போது வடமாகாண ஆளுநர அதிகாரிகளுக்கு பின்வரும் ஆலோசனைகளை முன்வைத்தார்.
வடக்கில் தொழில் வாய்ப்புகளை தேடி காத்திருக்கும் இளைஞர் யுவதிகளின் விபரங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதோடு, தொழில் வழங்குநர்களையும் இணைத்து தரவு தளம் ஒன்றை உருவாக்குங்கள்.
இவ்வாறான நடைமுறைகளை மாவட்ட ரீதியாக கடமையில் உள்ள உத்தியோகத்தர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் தேசிய பயிலுநர் அதிகாரசபை போன்றவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பாடசாலைகள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தேசிய கைத் தொழில் பயிலுநர் அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற பாயிற்ச்சி நெறிகளை குறித்த பாடசாலைகளில் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்துங்கள்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை தேடிச்செல்லும் இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே அவர்களின் துறைசார்ந்த துறைகளில் பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
மேலும் சுயதொழில் வாய்ப்புகளை மேற்கொள்பவர்களுக்கு தேவையான சந்தை வாய்ப்புகளை உள்நாட்டில் உருவாக்கிக் கொடுத்தல் அவர்களின் உற்பத்திகளுக்கு தேவையான மூலப் பொருட்களை தடையின்றி பெற்றுக்கடுத்தல்.
இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் நிலவுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடி இருந்தார்.





