
உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புமாறு மக்கள் விடுதலை முன்னணி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
தவறான கருத்துக்களை வெளியிடுவதை விடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கட்சியின் பிரதம செயலாளரான டில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போடே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதிலும், அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதிலும், எரிபொருள் மற்றும் மின்சாரம் வழங்குவதிலும் அரசாங்கம் தனது இயலாமையை நிரூபித்துள்ளது.
பொது மக்கள் பட்டினியால் வாடும் வேளையில் அரசாங்கம் நாட்டை இருளில் மூழ்கடித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் உரிமைகளை நிறைவேற்றக் கோரி குரல் எழுப்ப வேண்டும். அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் திறமையற்றவை.
தீர்வுகளை வழங்கக்கூடிய அரசாங்கத்தை அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம். மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி எரிபொருள் மற்றும் மின்சாரத்தை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான விருப்பங்களை இழந்துவிட்டது. தற்போதுள்ள ஆதாரங்களில் இருந்து அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு அரசாங்கத்தால் இயலாது. கொழும்பு துறைமுகம் அத்தகையதொரு தெரிவாகும்.
மேற்கு முனையத்தின் வளர்ச்சியை அரசாங்கம் நிறுத்திவிட்டது. அதற்குப் பதிலாக வெளிநாட்டவரின் நலனுக்காக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்கின்றது.
கிழக்கு முனையத்தை பிரதான கப்பல் போக்குவரத்து தளமாக மாற்றினால், நாடு பெரும் அந்நியச் செலாவணியை இழக்க நேரிடும்.
அவசர மற்றும் தன்னிச்சையான முடிவுகளால் நாடு உற்பத்திப் பொருளாதாரத்தை இழந்து கடன் பொருளாதாரத்திற்கு நகர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.





