சிங்கள பேரினவாத வேட்பாளர்களால் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது…! சிவனேசன் சுட்டிக்காட்டு…!

சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்களால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் காெடுக்கமாட்டார்கள். தமிழ் மக்கள் இதில் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன்  தெரிவித்தார்.

குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்றையதினம்(18) வழிபாட்டினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குருந்தூர் மலையினுடைய  தொன்று தொட்ட வரலாற்றில் இந்த பிரதேசம் ஆதிசிவன் ஐயனார் ஆலயமாக மக்களால் தொடர்ச்சியாக பூசிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மிக அண்மை காலங்களாக இப்பிரதேசத்தில் பதட்டமான  சூழ்நிலை நிலவி வருகின்றது. இதனால் இங்கே சுயமாக மக்கள் வழிபடுவதற்கு அச்சப்படுகின்றனர்.

மக்களின் பிரதான கோரிக்கை  என்னவெனில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்  மக்கள் சென்று சுமூகமான முறையில் வழிபட வேண்டும் என்பதே, அதே போன்றே இவ் ஆலயத்திற்கு பூசை செய்கின்ற  பூசகர்கள்  கூட இங்கே வர அஞ்சுகின்ற  ஒரு சூழலே இருக்கின்றது.

இப் பிரதேசத்திற்கு மிகிந்தலையில் இருந்து சிலர் கால்நடையாக வருகின்றனர். யாத்திரை வருவதனை பிழையான விடயமாக கருதவில்லை. தமிழ் பிரதேசத்திலிருந்து கதிர்காம கந்தனை வழிபடுவதற்காக யாத்திரை செல்கின்றோம். ஆனால் இங்கே வருபவர்களது யாத்திரை வெறுமனே வழிபாட்டுக்கான யாத்திரையாக நாம் கருதவில்லை, இது இப்பிரதேசத்திலே இருக்கும் மக்களை ஒரு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துவதே நோக்கம்.

அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதிலே முக்கியமான மூன்று வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். அதில் யாரோ ஒருவரிடைய வேலைத்திட்டமாகத்தான் இந்நிகழ்வு இடம்பெறுவதாக அனுமானிக்க முடிகின்றது.

இம் மூன்று வேட்பாளர்களும், யுத்தத்தை ஆதரித்தவர்கள், யுத்தம் நடக்க காரணமாக இருந்தவர்கள் அதாவது மக்களின் இன அழிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் என்றுதான் கூறலாம். அநுரகுமாரவை அவர் அப்படி இல்லை என கூறலாம். ஆனாலும் கூட வடக்கு  கிழக்கு  இணைப்பு என்பது 13ஆவது சீர்திருத்த  சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டபோது சட்டரீதியாக சென்று இணைப்பை பிரித்தவர்கள் அவர்கள் தான். அவரும் இத்தேர்தலிலே முக்கியமான வேட்பாளராக இருக்கின்றார். இவர்கள் தேர்தலிலே நிற்கும்போது இவர்களின் உதவி யாரோ ஒருவருக்கு தேவையாக இருக்கின்றது. பாவம் சிங்கள மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிப்பதற்கான முயற்சியாக தான் நாம் கருதுகின்றோம்.

ஆகவே யாத்திரையை ஒரு வழிபாட்டுக்கான  நிகழ்வாக நாம்  கருதவில்லை. இது எங்களுடைய பிரதேசம் , சங்கமித்தை தன்னுடைய சகோதரர்களுடன்  மிகிந்தலைக்கு சென்றிருக்கிறார். ஆனால் எந்த ஒரு வரலாற்றிலும் அவர் குருந்தூர் மலைக்கு வந்ததாக  கிடையாது. அப்படியானவர்கள்  மிகிந்தலையில் இருந்து யாத்திரையாக  வருகின்றார்கள்  என்றால் மிகிந்தலையுடன்  தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு வரலாற்றிலும்  சுட்டிக்காட்டப்படவில்லை. ஆகவே  வெறுமனே  ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை என்பதையே அவதானிக்க முடிகின்றது.

தமிழ் பேசும் மக்கள் அனைவரும்  சிந்திக்க வேண்டிய ஒன்று. சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் காெடுக்கமாட்டார்கள்.  என்பதிலே தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே  எங்களுடைய ஆர்வம் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *