‘உறுமய’ நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
20 இலட்சம் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 20,000 பேரில் 1768 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘உறுமய’ நிரந்தர காணி உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த தகவல்களை தனக்குப் பெற்றுத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரினார்.
தமக்குரிய காணி உறுதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமையைப் பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.