சங்கானை பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அம்மாச்சி’ பாரம்பரிய உணவக திறப்பு விழா இன்றைய தினம்(25) இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையானது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் சங்கானை பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அம்மாச்சி பாரம்பரிய உணவகமாக உருவாக்குவது என்ற தீர்மானத்திற்கு அமைவாக குறித்த உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நாடா வெட்டி , மங்கல விளக்கு ஏற்றப்பட்டு உணவகம் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் சம்பிரதாய முறைப்படி பால் அடுப்பை பற்ற வைத்து உணவகத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின்னர் அரங்க நிகழ்வுகளாக உள்ளூர் எழுத்தாளர்கள், உள்ளூர் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், விசேட தேவையுடைய பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில், விருந்தினர்கள், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.