வைத்தியசாலையின் அசண்டையீனம்? பறிபோனது நோயாளியின் உயிர்…! குற்றம் சுமத்தும் உறவினர்கள்…!

வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் வைத்தியசாலை அசமந்த போக்கினால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(26) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) அன்று நெஞ்சுவலி காரணமாக செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையினர் நோயாளியை உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அறிவித்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

இதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நோயாளியை வவுனியா வைத்தியசாலைக்கு  மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

நோயாளர் காவு வண்டி புறப்பட்டு ஏறக்குறைய 15 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில் மேலதிகமாக மேலும் ஒருவரை ஏற்றிச்செல்ல இருப்பதாக கூறி குறித்த நோயாளர் காவு வண்டியை மீண்டும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியசாலை தரப்பினர் திருப்பி அழைத்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், மீள வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டியில் இருந்த நோயாளி செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையிலே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

அதேவேளை, மேலதிக சிகிச்சை வழங்க தாமதமானதாலேயே உயிரிழந்துள்ளார் என உறவினர்களும் அப்பிரதேச மக்களும் வைத்தியசாலை மீது குற்றம் சாட்டுகின்றனர்

மேலும், இறந்தவரின் உடல் இன்றைய தினம் (27) வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரண விசாரனை அதிகாரியின் விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இச்சம்பவத்தால் செட்டிகுளம் வைத்தியசாலை பகுதி சற்று பதற்றமான நிலை காணப்படுவதுடன் உயிரிழந்தவரின் உறவினர்கள், கிராம மக்கள் வைத்தியசாலைக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *