வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை உரியவர்களுக்கு வழங்குங்கள்…! சபா.குகதாஸ் கோரிக்கை…!

வடமாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள விவசாயப் பண்ணைகள் அமைத்துள்ள பொது மக்களின் நிலங்களை உரிய மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு வட மாகாண ஆளுநரிடம் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(29)  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

அண்மையில் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கரிசனை மாத்திரமல்ல பல திட்டங்களை வைத்துள்ளார் என குறிப்பிட்டார்.

உண்மையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் பொருளாதார வளர்ச்சி என்பதை மக்களின் வாழ்வாதார வளர்ச்சியே தீர்மானிக்கும் இதற்கு மாற்றுக் கருத்து பொருளாதார நிபுணர்களிடம் இருக்காது. இவ்வாறான நிலையில் ஆளுநர் அவர்கள் வடக்கு மக்களின் வாழ்வாதார வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த பின்வரும் வேலைத் திட்டங்களில் வெற்றி காண வேண்டும் அதனை உங்களின் பதவிக் காலத்தில் முடிந்தால் செயலாற்றுங்கள்.

வடக்கு மாகாணத்தில் 60% மக்களின் வாழ்வாதாரத் தொழில் விவசாயமும் மீன்பிடியும் ஆகும் வடக்கு மீனவர்கள் எதிர் நோக்கும் சட்டவிரோத மீன்பிடிக்கு  நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுங்கள்.

விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க விவசாயத் துறையை விருத்தி செய்வதுடன்  மானியங்களையும் பாதிப்பில்லாத சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்துங்கள் இராணுவம் கையகப்படுத்தி விவசாயப் பண்ணைகள்   அமைத்துள்ள பொது மக்களின் நிலங்களை உரிய மக்களுக்கு பெற்றுக் கொடுங்கள்.

வடக்கில் உள்ள மாகாண அரச காணிகளை தொழில் வாய்ப்பு இல்லாமல் முடங்கியுள்ள, வழி தவறி வரும்  இளையோருக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பியுங்கள். முதலீட்டாளர்கள் பாதுகாப்புடன் முதலீடுகளை கொண்டு வருவதற்கு சட்டரீதியான சூழலை உருவாக்குங்கள்.

எனவே, பொருளாதார வளர்ச்சி என்பது ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களால் சாத்தியமில்லை மக்களின் வாழ்வாதார விடையங்களுக்கு தடையாக உள்ள விடையங்களுக்கு தீர்வு காண்பதன் மூலமே சாத்தியமாகும்  எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *