புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்றும் புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான இராஜாங்கனை – சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இந்த உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது, காட்டு யானையொன்று பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,
அதனைக் கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக முச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்டுள்ளார்.
இதன்போது, புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது, முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் நாளாந்தம் காட்டு யானைகள் தரித்து நிற்பது, வீதியை கடப்பது தொடர்பில் வாகன சாரதிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
எனினும், வாகன சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக வாகனங்களை செலுத்துவதினாலேயே இவ்வாறான விபத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, இது தொடர்பில் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், குறித்த வீதியில் கடந்த காலங்களில் காட்டு யானைகளால் பல விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், பலர் உயிரிழந்ததாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.