My Dream Academy – DP Education IT Campus ஆகியன இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள coding கற்கை நெறி கற்கைகளை கற்கும் மாணவர்களுக்கான தரச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30.06.2024) யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெற்றது.
DP EDUCATION நிறுவன ஸ்தாபகரும், தலைவருமான, பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, My dream academy நிறுவுனரும், பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பங்கேற்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3000 மாணவர்கள் தமக்கான திறமைச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்விப்பாரம்பரியத்தின் புதிய அத்தியாய தொடக்கமாக இந்நிகழ்வு அமைவதோடு, தகவல் தொழில்நுட்ப கல்வியை முற்றிலும் இலவசமாக எமது இளையோருக்கு கொடுப்பதன் ஊடாக, தொழில்நுட்ப புரட்சியொன்றை எம்மண்ணில் ஏற்படுத்துவதே My Dream Academy இன் நோக்கமாக உள்ளது. அத்துடன் நாடுமுழுவதும் மில்லியன் கணக்கான கோடிங் மென்பொருள் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் DP Education இப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.
நாடுமுழுவதும் DP Education நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் IT campus செயற்றிட்டங்கள், யாழ் மாவட்டத்தில் என் கனவு யாழ் அறக்கட்டளையின் my dream academy உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, நல்லூர், புத்தூர், வல்வெட்டி, நெல்லியடி, தெல்லிப்பழை, சுன்னாகம், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் இக்கற்கை நெறிகள் முற்றிலும் இலவசமாக கற்பிக்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் சான்றிதழ் பெற வந்த பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் கையால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது