இன்றைய பிள்ளைகள் நாளைய தலைவர்களாக உருவாக வேண்டுமெனில், அவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் ஊக்குவிப்பும், கரிசனையும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.
குருநாகல் மாவட்டத்தின் தெலியாகொன்னை ஹிஸ்புல்லாஹ் தேசிய கல்லூரியில் இடம்பெற்ற புதிய உயர்தர வகுப்புகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும் பரிசளிப்பு வைபவ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
இன்றைய பிள்ளைகளை நாளைய தலைவர்கள் என்று வெறுமனே கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதற்கான பின்புலம் வலுவான முறையில் உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களினால் மட்டும் அதனை மேற்கொள்ள முடியாது. பெற்றோரும் அதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்.
பிள்ளைகள் தங்கள் எதிர்கால இலக்குகளை அமைத்துக்கொள்ளல், அதனை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகள் என்பவற்றில் சரியான முறையில் வழிகாட்டப்படவும், வழிநடத்தப்படவும் வேண்டும். அதன் ஊடாக உருவாக்கப்படும் பிள்ளைகள் நாளைய தலைவர்களாக, நற்பிரசைகளாக உருவாகி ஊருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இலங்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நிலவிய நெருக்கடியான சூழல், பொருளாதார நெருக்கடிகள் இன்று இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடு சுபீட்சத்தை நோக்ய பாதையில் சுமுகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. கல்விக்கான அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, பாடசாலைகள் மூடப்பட்டு, சீருடைகள் இன்றி, பாடப்புத்தகங்கள் இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த இளம் சமுதாயம் இன்று மீண்டும் தங்கள் கல்விப் பயணத்தைத் தடைகள் இன்றி மேற்கொள்ள முடிந்துள்ளது.
இந்த நிலைமையை இனியும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதல் காரணமாக நாடு மீட்சியடைந்து கொண்டிருப்பதன் காரணமாக தற்போது மாணவர்களுக்குள் மீண்டும் தங்கள் எதிர்காலம் குறித்த வளமான கனவுகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன.
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என்று உலகத்துடன் போட்டி போடும் வகையில் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இந்தக் கனவுகள் தொடர்ந்தும் துளிர்விட வேண்டுமே தவிர நம் இளம் தளிர்களின் கனவுகள் கருகி விடக் கூடாது. அதற்கான பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் கல்வித் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. என்னுடைய பதவிக் காலத்தில் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
குறித்த இந்த நிகழ்வில் வடமேல் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றியாஸ், மருத்துவர் ஷாபி சிஹாப்தீன், குருநாகல் சாஹிரா கல்லூரியின் அதிபர் ஏ.எம்.சித்தீக், பிரபல சமூக சேவையாளர் சபருல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.