வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் திறந்து வைப்பு…!

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட நகரக் காரியாலயம் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால் இன்று(04) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, பண்டாரிக்குளம், பாடசாலை வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கட்சியின் பொதுச் செயலாளர், வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொடிகளை பறக்க விட்டபடி ஊர்வலமாக வவுனியா, பண்டாரிக்குளம், பாடசாலை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அலுவலகத்தின் பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்துடன், நாடா வெட்டி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

வவுனியா நகர அமைப்பாளர் சி.பிறேமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், பொது மக்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *