தேசியத் தலைவர் வரிசையில் சம்பந்தனும் பதியப்படுவார்…!சீ.வீ.கே. சிவஞானம் இரங்கல்…!

ஈழத் தமிழினத்தின் தன்னாட்சி உரிமையை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காதவராக சம்பந்தன் விளங்கியதுடன்,தேசியத் தலைவர் பி…ர..பாகரன் வரிசையில் அமரர் சம்பந்தனும் பதியப்படுவார் எனவும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் மறைவையொட்டி அவர் நேற்று (05) விடுத்த இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது இளமைக் காலத்தில் இருந்தே தமிழையும், தமிழ் மண்ணையும் – கலாசாரத்தையும் – இன அடையாளத்தையும் – பண்பாடுகளையும் இறுதி வரை நேசித்து ஓங்கி ஒலித்த – திருமலை தந்த இரா. சம்பந்தன் என்ற தமிழ் தேசிய இனத்தின் போராளியின் குரல் ஓய்ந்துவிட்டது.

இவரின் இன விடுதலை வேட்கையையும் விடுதலை போராட்ட உணர்வையும்  இனங்கண்ட தந்தை செல்வநாயகம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைத்துக் கொண்டார். இதனை ஒருமுறை தந்தை செல்வா நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது மனநெகிழ்ச்சியோடு என்னுடன் பகிர்ந்து கொண்டமையையும் அவர் தந்தை செல்வாவின் மீது வைத்திருந்த  அதீதபற்றையும் நான் பார்த்திருக்கின்றேன்.

இவ்வாறு தந்தை செல்வாவால் தேடி அரசியலுக்கு கொண்டு வரப்பட்டபோது சம்பந்தன் ஐயா திருமலையில் பெரும் வருமானம் ஈட்டும் சட்டத் தரணியாக சட்டத்துறையில் திகழ்ந்தவர். அவ்வாறான வருமானத்தை முழுமையாக கைவிட்டே 1977ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டிலிருந்து இறுதி வரை திருமலையின் பாராளுமன்ற  பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவராகவும் செயல்பட்டு எல்லோரையும் அரவணைத்துச் சென்றவர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரை 2001ஆம் ஆண்டிலிருந்து 2014 வரை அதன் தலைவராகவும்  அதன் பின்னர் அதன் பெருந்தலைவராகவும்  செயல்பட்டவர். கட்சியில் அவரின் இறுதி வார்த்தைகளுக்கு நாமெல்லோரும் கட்டுப்பட்டே இயங்கி வந்திருக்கிறோம். கட்சி கூட்டம் எதுவாகினும் நடவடிக்கைகளை கவனிக்காததுபோலக் காட்டி முழுமையாகக்  கிரகித்து நிறைவுரை நிகழ்த்தும்போது எல்லோராலும் கூறப்படும் கருத்துகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்கும் நினைவாற்றல் அற்புதமானது.

ஈழத் தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்துவதிலும் அதன் தன்மான, தன்னாட்சி உரிமையை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காதவராகவே சம்பந்தன் ஐயா விளங்கினார். எல்லா நிகழ்வு மாற்றக் காலங்களிலும் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இணைப்பாட்சி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தியதுடன் அது சாத்தியப்படாது போனால் வெளியக சுயநிர்ணய உரிமையை நாம் பிரயோகிப்போம் எனத் தெளிவாக கூறி வந்தவர்.

இவருடைய ஆற்றல், அறிவுடமை, அனுபவம், அரசியல் அணுகுமுறை காரணமாக தெற்கத்திய சிங்களத் தலைவர்களாலும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மதிக்கப்பட்டவர். அவ்வாறே சர்வதேச மட்டத்திலும் மதிக்கப்பட்டவர். பிற்காலத்தில் அவரின் உடல் நிலை தளர்வடைந்த போதும் அவரின் அற்புதமான நினைவாற்றல் தளரவே இல்லை.

தாம் ஏற்றுக் கொண்ட கொள்கையையும் கருத்துகளையும் எவர் முன்னிலையிலும் மேசையிலே அடித்துக் கூறும் உதாரணத்துக்கு அவர் உதாரணமாக விளங்கினார். இதனாலேயே பல்வேறு  உயர் மட்டத்தினரும் அவரை வீடு தேடிச் சென்று சந்தித்தனர். பல்வேறு சூழ்நிலை மாற்றங்களின்போதும் தமிழ்த் தேசியப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையோடு  செயல்பட்டவர்.

தத்தமது காலத்திலேயே தமிழினப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று முயன்ற தமிழ் அரசுத் தந்தை செல்வநாயகம், தேசியத் தலைவர் பி.. ர….பா/ கரன் வரிசையில் அமரர் சம்பந்தன் ஐயா அவர்களும் பதியப்படுவார். இதேநேரம் இந்த வரிசையில் உள்ள தனிமனித தலைமைத்துவ சகாப்தத்தின் முடிவாகவும் இது இருக்கும் என் நான் கருதுகிறேன்.

இதனைக் கருத்தில்கொண்டே சம்பந்தன் ஐயாவின் காலத்திலாவது  இனப் பிரச்னைக்கான தீர்வை நாம் காண வேண்டும் என அங்கலாய்த்து பிரார்த்தித்தவர்களில் ஒருவன் என்ற வகையில், அவரின் கால முடிவில் இனி ஒரு தனிமனித தலைமை உருவாகாது என்பதையும் கூட்டுச் செயல்பாடு ஏற்படவேண்டுமெனில் அது ஒரு கூட்டுத் தலைமையே அமையும் என சில காலமாக நான் கூறி வந்திருக்கிறேன்.

சம்பந்தன் ஐயா திருமலை காளி அம்பாளில் மிகத் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவர். அதனாலேயே தாம் சரியெனக் கருதியவற்றை எந்தக் கரவுகளுமின்றி வெளிப்படையாகவே கூறி வந்தவர். “உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்” எனும் வள்ளுவர் வாக்குக்கு அமைய தமக்கு சரியெனப் பட்டதை துணிந்து கூறி எம்மை வழி நடத்திய  பெருந்தகை சம்பந்தன் ஐயா. எம் எல்லோரின் உள்ளங்களில் நினைவு நிலையில் இருப்பார் என்பது திண்ணம்.

ஒரு தலைசிறந்த தலைமைக்கு எமது சிரம் தாழ்த்திய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் ஆத்மா அவர் நித்தம் வணங்கும் காளி அம்பாளின் பாதார விந்தத்தில் அமைதி பெற பிரார்த்திப்பதுடன் அன்னாரது குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *