வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம் நேற்று மாலை யானைகள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட வரலாற்றினையும் பெருமையினையும் கொண்ட வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மஹோற்சவகால குரு சிவ ஸ்ரீ வைத்தியநாத வைகுந்த சிவாச்சாரியார் தலைமையில் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து நேற்று மாலை விசேட தம்ப பூஜை மூலவருக்கு அபிசேக அலங்கார பூஜை நடைபெற்று வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டு யானைகளின் ஊர்வலத்துடன் பஞ்சமுக விநாயகர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேரடியில் விசேட பூஜைகள் நடைபெற்று தேர் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க தேர் உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேர் உற்சவத்தில் பெருமளவான இஸ்லாமிய மக்களும் கலந்துகொண்டு விழாவை கண்டு களித்தமை சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயம் எட்டாம் நூற்றாண்டு வரலாற்றினைக்கொண்டதுடன் சோழ இளவரசியான சீர்பாத தேவியினால் அமைக்கப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *