மீண்டும் ரயில் சேவைகள் முடங்கும்! – எச்சரிக்கை விடுத்த ரயில் நிலைய அதிபர்கள்

 

922 ரயில் நிலைய அதிபர்களின் தொழில்சார் பிரச்சினைகளான பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு போன்றவற்றுக்கு அமைச்சரவை தீர்வு காணாவிட்டால் நாளை முதல் மீண்டும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தமது 13 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் தீர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் சுமேத நவரத்ன தெரிவித்திருந்தார்

அந்த அறிக்கைக்கு பதிலளித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, ரயில் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு செய்தால், சேவையை கைவிட்டது போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் துறை தொடர்பான பிரச்சினை இருப்பின் கலந்துரையாடல் மூலம் தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் மக்களை ஒடுக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்தால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், இலங்கையின் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *