முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அவருக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான அரசியல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு(12) பாணந்துறை பிரதேசத்தில் ஜனாதிபதி தரப்பில் விசேட பிரதிநிதி மற்றும் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை இன்றையதினம்(13) பிற்பகல் கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ராஜித சேனாரத்ன, இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் பங்குபற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் ஒருவர்.
முன்னாள் அமைச்சரின் அரசியல் தீர்மானம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு இடையூறாக அமையாது என களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய அரசியல் ஆர்வலர்கள் அவசர அவசரமாக செய்தியாளர் மாநாட்டை நடத்தத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.