சமூக நலன் கருதி கொழும்பை சேர்ந்த இளைஞனொருவர் ஒருவர் நடைப்பயணமாக இலங்கையை வலம் வரும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மட்டக்குளியை சேர்ந்த இக்ரம் எனும் இளைஞர் இம் மாதம் 01 ஆம் திகதி கொழும்பு மட்டக்குளியில் இருந்து பல இலக்குகளை முன்வைத்து நடைப்பயணம் ஒன்றினை ஆரம்பித்திருந்தார்.
அதன்படி 24 ஆவது நாளான நேற்றையதினம் புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
குறித்த இளைஞன் புற்று நோயாளர்களுக்காக நிதி சேகரித்து அவர்களுக்கான சிகிச்சை வழங்குவது, இளைஞர்களை போதைவஸ்துக்கு அடிமையாகாமல் பாதுகாக்க வேண்டும், வறுமையில் வீதிகளில் தவிக்கும் உறவுகளின் தரவுகளை திரட்டி சமூகவலைதளங்கள் ஊடாக உதவி கோரி உதவிகளை பெற்றுகொடுப்பது என மூன்று இலக்குகளினை வைத்து குறித்த நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நடைபயணத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு பல்வேறு இடங்களிலும் மக்கள் தமது ஆதரவினை தெரிவித்து வருவதுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.