வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவித்தல் – வியாழக்கிழமை முதல் கடும் மழை

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மழை பெய்யும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியற்றுறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

உருவாகும் தாழமுக்கம் நகர்வதற்கு இரண்டு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன . இலங்கையின் தெற்கு மற்றும் தென் கிழக்குப் பகுதிகளூடாக மேற்கு நோக்கி நகர்ந்து, அரபிக் கடலைச் சென்றடையும் அல்லது இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளூடாக வடக்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாப் பகுதியில் அரபிக் கடலை சென்றடையும் .

இரண்டு பகுதிகளுக்கு ஊடாகவும் நகர் வதற்கான வாய்ப்புக்கள் சமனான அளவிலேயே உள்ளமையால் நகர்வுப் பாதை தொடர்பில் இறுதியான தகவல்களை அடுத்து வரும் நாள்களிலேயே உறுதிப்படுத்த முடியும் .

எந்தத் திசையில் நகர்ந்தாலும் எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 6 ஆம் திகதி சனிக்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாகக் கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது .

மேலும் நாளைமறுதினம் 2 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் இலங்கையின் வடக்கு – கிழக்கு , தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியமாகும்.

விவசாயிகளும் கனமழை காரணமாக பாதிக்கப்படக்கூடிய அறுவடை மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளில் போதுமான திட்டமிடல் மற்றும் முன்னேற் பாடுகளை மேற்கொள்வது பயிர்ச் சேதங் களை தவிர்க்கும் – என்றார்.

Leave a Reply