
கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த 12 இந்திய மீனவர்களும் கடந்த 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது இன்று திங்கட்கிழமை குறித்த இந்திய மீனவர்களை மன்றல் முன்னிலைப்படுத்துமாறும் அன்றைய தினம் குறித்த இரண்டு வழக்குகளுக்கும் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்யுமாறும் கட்டளை இடப்பட்டது
அதற்கமைய, இன்றைய தினம் 12 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் குற்றச்சாட்டு பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, குறித்த இரண்டு வழக்குகளுடனும் தொடர்புபட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் தலா ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இவர்களை கைது செய்யும்போது இவர்களிடமிருந்த கைத்தொலைபேசிகள், ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட மலேசிய நாணயம் மற்றும் இந்திய நாணயங்கள் விடுவிக்கப்பட்டது டன், படகுகள் வலைகள் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
குறித்த இரு வழக்குகளிலும் இந்திய மீனவர்கள் சார்பாக இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





