(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையினை கருத்தில் கொண்டு இரண்டு பிள்ளைககுளுக்கு மேல் மூன்றாவது குழந்தையினை பெற்றெடுத்த 17 தாய்மார்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு திங்கட் கிழமை (28) நரிப்புல்தோட்டம் கிராமத்தில் இடம் பெற்றது.
சுவிஸ் அறம் தன்னார்வ தொண்டு அமைப்பினால் மேற்படி தாய்மாருக்கு தலா ரூபாய் 10,000 வழங்கப்பட்டதுடன் பிள்ளைகளின் 18 வயது வரை மாதம் ஒன்றிற்கு ரூபா 1000 வங்கியில் வைப்புச் செய்யப்பட்டது.
2016 சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நரிப்புல்தோட்டம் என்னும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் 6வது வருடமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நரிப்புல் தோட்டம், மகிழவட்டவான், பங்குடாவெளி, விளாவட்டவான், நெல்லூர், சொறுவாமுனை, மணிபுரம் ஆகிய கிராமங்கள் இதில் உள்வாங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற்று வரும் அனைத்து தாய்மாருக்கும் பிள்ளைகளுக்கும் நாட்டின் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு உடுதுணிகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி கல்வி பணிப்பாளர்களான மகேந்திரகுமார், ஹரிகரராஜ் , சுவிஸ் வாழ் சிவசாந்தி அமிர்தலிங்கம் , ஆசிரியர் வே.சசிகரன் கிராம அபிவிருத்தித் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .










