
சென்னை, மார்ச்.01
திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை தனது பணியாக மேற்கொள்ளவிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தனது சுயசரிதை வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சுயசரிதை நூலான “உங்களில் ஒருவன் பாகம் 1” இன்று சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன், பிஹாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடந்த விழாவில் பங்கேற்றவர்களை தி.மு.கவின் நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி வரவேற்றார்.
இதற்குப் பிறகு, உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் மு. கருணாநிதியின் கோபலபுரம் வீட்டைப் போல வடிவமைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட்டார்.
இதற்குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய ஏற்புரையில், ‘திராவிட மாடல் கோட்பாட்டை’ இந்தியா முழுமைக்கும் விதைப்பதை தனது பணியாக மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திராவிட மாடல் என்ற வார்த்தையை ஸ்டாலின் பயன்படுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.
அந்த தேர்தல் வெற்றியை குறிக்கும் வகையிலே பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எங்களது ஒன்பது மாத கால ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் என குறிப்பிட்டார்.
அதற்கு முன்பாக, கடந்த ஆண்டு ஜூலை 9ஆம் தேதி பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், எஸ்தர் தஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ். நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எஸ்.நாராயணன் எழுதிய “Dravidian Years” நூலை மேற்கோள்காட்டிப் பேசினார்.
“Dravidian Years” புத்தகத்தில் எஸ். நாராயணன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது.”
இதை குறிப்பிட்ட ஸ்டாலின், “இதுதான் திராவிட மாடல். எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்த பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற தமது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருந்த மேடையில் திராவிட மாடல் கோட்பாடு பற்றி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.





