கட்டுவன் மயிலிட்டிப் பாதை: இழப்பீட்டை பெற்று நிலத்தை வழங்க இராணுவ அதிகாரி விடுத்த கோரிக்கைக்கு நில உரிமையாளர்கள் மறுப்பு

கட்டுவன் மயிலிட்டிப் பாதையில் சர்ச்சைக்குரிய 400 மீற்றர் தூரத்திற்கும் இழப்பீட்டை பெற்று நிலத்தை வழங்குமாறு இராணுவ அதிகாரி விடுத்த கோரிக்கைக்கு நில உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான பாதையில் 400 மீற்றர் பிரச்சினை தொடர்பில் காணி உரிமையாளர்களிற்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மக்களிற்கான போக்குவரத்துப் பாதை தேவை என்பதனாலும் விமான நிலைய அபிவிருத்திக்கும் இடம்தேவை என்ற வகையில் பழைய வீதியை விட முடியவில்லை.

அதேநேரம் இந்த பாதையை அமைக்குமாறு ஜனாதிபதி கூறியதற்கமைய 2013 ஆம் ஆண்டு 6,347 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிற்கு அமைய வீதி அமைக்கப்பட்டது.

இதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக நில உரிமையாளர்களிற்கு அந்த நிலத்திற்கான நட்ட ஈட்டை வழங்கலாம் என படை அதிகாரியும் தெல்லிப்பழை பிரதேச செயலாளரும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நில உரிமையாளர்கள்,

எமது நிலத்தில் எமது கிணறுகளைமூடி எந்தவொரு ஒப்புதலும் இன்றி வீதியை அமைத்துவிட்டு இன்று எம்மைகூப்பிட்டு கதைக்கும் நீங்கள் இந்த அநியாயத்தை செய்ய முதல் ஓர் கலந்துரையாடலிற்கு வந்திருக்க வேண்டும்.

வெறும் 25 மீற்றர் எமது நிலத்தில் பாதுகாப்பு வேலியை பின்னகர்த்த முடியாத நீங்கள் தற்போதும் அமைக்கும் வீதிக்கான அடித்தளத்தை எமது காணிக்குள் இணைத்து அமைப்பதோடு இதற்காக இன்னும் 15 நிலம் வெள்ள வாய்க்காலும் பறிபோகும் நிலமையை ஏற்படுத்துகின்றீர்கள். அவ்வாறானால் மேலும் பல பரப்பு காணிகளை உரிமையாளர்கள் இழக்க வேண்டும்.

போக்குவரத்திற்கு பாதை இல்லையென மக்கள் கேட்டதனால் மக்களிற்காக வீதியை அமைத்ததாக கூறும் நீங்கள் அதே மக்களே கேட்கின்றனர். கட்டுவன் அச்சுவேலி வீதியை திறந்துவிடுங்கள் 5 மைல் பயணத்திற்கு 20 மைல் சுற்றிப் பயணிக்கின்றோம் என்றபோது வராத கரிசனை 2 மைல் சுற்றும் மக்களில் ஏற்பட்டதா?.

எமது நிலம் எமக்கு வேண்டும். அதற்காக தற்போது போட்ட வீதி அகற்றப்பட வேண்டும். இல்லையேல், இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யவே நாம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.- எனப் பதிலளித்தனர்.

Leave a Reply