ஊடகவியலாளரைத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு, மார்ச் 1

மட்டக்களப்பு – வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் இலட்சுமனன் தேவப்பிரதீபன் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை எதிர்வரும் 04.03.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரை ஏறாவூர் பொலிஸார் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 04.03.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரின் தொலைபேசி தொடர்பான அறிக்கையினையும் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து செங்கலடி வைத்தியசாலைக்கு வந்த பொலிஸார் தமது தொலைபேசியினை பெற்றுச் சென்றுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.

வந்தாறுமூலை சந்தைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் அகற்றப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் நியாயம் கேட்டு கடந்த 26.2.2022 அன்று கவனயீர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒளிப்படம் எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர் கிழக்கு பல்கலைக் கழகத்தில் கடமையாற்றும் வே.நந்தகுகுமார் (கண்ணன்) என்பவரால் தாக்கப்பட்டார். தொடர்ந்து குறித்த சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்ற நலன் விரும்பிகள் தாக்கப்பட்டதுடன், ஏனைய ஊடகவியலாளர்கள் குறித்த நபரினால் அச்சுறுத்தப்பட்டிருந்தனர்.

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுடன் சம்பந்தப்பட்டவர் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தாக்குதல் மேற்கொண்டவருக்கும் தங்கள் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கிரானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply