பல நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் கைது

பல நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் வத்தளை வெலியமுனை வீதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய இந்த நபர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை மற்றும் வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தங்க நகைகளை திருடிய குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு புதுக்கடை, அத்தனகல்ல, கண்டி, கேகாலை, வத்தளை, கல்கிசை, கம்பஹா, கந்தளாய், மாரவில, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை ஆகிய நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரால் திருடப்பட்ட தங்கப் பொருட்கள் நகை நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட பின்னர் உருக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் திருடிய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இன்று (02) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply