மேலும் இரு டீசல் கப்பல்கள் இலங்கை வருகை

கொழும்பு, மார்ச் 02

டீசலை ஏற்றிய இரு கப்பல்கள் இன்றும் (02) நாளையும்(03) நாட்டை வந்தடையவுள்ளன. இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார்.

மற்றைய கப்பலில் 28,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமானத்திற்கான எரிபொருள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் நாயகம் கூறினார்.

குறித்த கப்பல்களுக்கான கடன் கடிதங்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். எண்ணெயை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு எரிபொருள் ஏற்றிவரும் எந்தவொரு கப்பலும் நிராகரிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் ​கொள்கலன் மாதிரிகளும் முறையான சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமும் இது தொடர்பில் வினவியதாகவும் மாதிரி எதுவும் நிராகரிக்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

Leave a Reply