யாழ். இந்திய துணைத் தூதுவரை சந்தித்த திருச்சி முகாமில் உள்ளவர்களின் உறவுகள்!

தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள், யாழ் இந்திய துணைத் தூதுவரை ராகேஸ் நட்ராயை இன்று மதியம் சந்தித்துள்ளனர்.

விசா காலம் நிறைவடைந்தமை, பாஸ்போட் இல்லாமல் உள்நுழைவு போன்ற பல்வேறு காரணங்களுக்காக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், தம்மை நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதேவேளை உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பில், உறவுகளால் யாழ் இந்திய துணைத் தூதுவரிடம் இன்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பாடுள்ளதாவது,

திருச்சி சிறப்பு முகாம் சிறைவாசிகளாகிய நாங்கள் கடந்த பல வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம். இங்கே இலங்கையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சுமார் 50 பேர் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

இங்கிருந்த நாடு செல்லவிரும்பும் அனைவரும் இந்திய கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முயன்றமை, இந்திய நுழைவுச்சீட்டு முடிந்தபின்னரும் வசித்தமை மற்றும்இலங்கையில் இருந்து படகு மூலம் வந்த குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு முறையான நீதிமன்ற பிணையில் வெளிவந்து, மறுபடியும் சிறப்பு முகாம் எனும் வெளிநாட்டவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.

இக் குற்றத்துக்காக இரண்டில் இருந்து 4 வருடங்களாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும் தற்போது கொரோனா எனும் பெரும் தொற்றை காரணம் காட்டியும் எமது வழக்குகள் பின்நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறன.

ஐயா எமது குடும்பங்கள் இலங்கையில் மிகவும் வறுமையிலும் எங்களது உதவியும் இன்றி பல வருடங்களாக மன உழைச்சலுக்கு உள்ளாகி வாழ்கின்றனர். நாங்களும் எமது விடுதலைக்காக இங்கு பல போராட்டங்களை அமைதியான முறையில் நடாத்தி வந்தோம்.

ஆனால் இன்று வரைக்கும் எந்தவித முடிவும் இல்லாமல் இங்கு துயரப்பட்டு வாழ்கிறோம். எமது உயிரைக்கூட மாய்க்கும் மனவிரக்திக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஐயா இந்த நாட்டு அரசுடன் பேசி எமது வழக்குகளை ரத்து செய்து பொது மன்னிப்பு அடிப்படையில் எம்மை எமது தாய் நாட்டுக்கு மீட்டு எடுக்க உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் பணிவுடன் எமது உறவுகள் ஊடாக கேட்டுக்கொள்கிறோம்.- என்றுள்ளது.

Leave a Reply