கொழும்பில் இடம்பெறும் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி..!

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் நடைபெறும் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியானது இன்றைய தினம்(10) கொழும்பில் ஆரம்பமாகியது.

2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை இன்றைய தினம் கொழும்பு ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பிரதம அதிதியாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனியுடன் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பட்ச் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குமார் லோபேஸ் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக மங்கள விளக்கேற்றி கண்காட்சியை நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில், உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி முகாமையாளர் மற்றும் கண்காணிப்பாளர் மார்தா எச்செவர்ரியா கோன்சாலஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குமார் லோபேஸ்,

இன்று முதல் 20 ஆம் திகதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை கட்டணமின்றி இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபத்தில் இம்மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும், காலியில் மாநகர சபை மண்டபத்தில் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரையும் மீண்டும் கொழும்பில் சினமன் லைப் ஹோட்டலில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். 

இந்த கண்காட்சியானது இலங்கையில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கையில் நடைபெறுகிறது.

இதேவேளை சவால்களை வெளிப்படுத்தும் இந்த புகைப்படங்கள் உத்வேகம் அளிக்கும் உயர்தரம் வாய்ந்த காட்சி கதைகளையும் வெளிப்படுத்துகின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *