
நாட்டில் எந்த பக்கத்தை எடுத்துக்கொண்டாலும் டீசலுக்கான வரிசையை காணக்கூடியதாக உள்ளது. கிலோமீற்றர் கணக்கில் நீண்டவரிசை காணப்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கவலை தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நீண்டவரிசையில் காத்திருக்கும் வாகனங்களை அவ்விடத்திலிருந்து விலக்கிக்கொள்ள முடியாமல் உள்ளது. ஏனெனில் வாகனங்களிலும் டீசல் இல்லை. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் இல்லை
மேலும், எரிபொருளுடன் கப்பலொன்று துறைமுகத்தில் தரித்து நின்றது. தொலைபேசிக்கு மீள்நிரப்பு அட்டையை செலுத்துவதை போன்றே கப்பலிலிருந்து எரிபொருளை கொள்ளவனவு செய்ய நேர்ந்துள்ளது.
அதேபோன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்றால் 3,000 ரூபாய்க்கே எரிபொருளை வழங்க முடியும் என்று பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
நுகர்வோருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. மீள்நிரப்பு அட்டையையும் செலுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
நாட்டில் எரிபொருள் இல்லை. இதுவே உண்மை நிலவரம். மட்டுப்படுத்தப்பட்ட அளவில்கூட டீசலை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
வீட்டைவிட்டு வெளியே சென்றால் நாடு எத்தகைய நிலையில் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். இதன் காரணமாகவே வாகனங்கள் கிலோமீற்றர் அளவில் நீண்டவரிசையில் காத்திருக்கின்றன.
நாடு தற்போது நிலையில் பாரியளவிலான நெருக்கடிக்கு சென்றுள்ளது.
தவறான கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களை வீட்டுக்கு அனுப்பாவிட்டால் இந்தப் பிரச்சினையிலிருந்து தற்போதைய நிலையில் மீள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.





