பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்ன இருந்தது? – அரசிடம் விமல் கேள்வி

 

மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. பேச்சளவில் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படுகிறது.

ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்கள் மாகாண ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்படுகிறது.

அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கொள்கலன்களை பரிசோதனை செய்யாமல் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது.

323 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான விபரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மக்கள் வெகுவிரைவில் அறிந்துக் கொள்வார்கள். என்றார்.

இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிவப்பு கொடி கொண்ட கொள்கலன்களை அனுமதித்ததில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் மறுத்துள்ளார்.

அந்த கொள்கலன்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளால் தான் வருத்தமடைந்ததாகவும் ஆளுநர் கூறினார்.

மேலும், தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்வதில் மட்டுமே விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *