
ரஷ்யா, மார்ச் 03
மூன்றாம் உலகப் போா் நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்’ என ரஷ்ய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்தாா்.
உக்ரைன் மீது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதோடு, ரஷ்ய படைகளின் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்தச் சூழலில், ‘நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது’ என்று ரஷ்ய அதிபா் புடின் எச்சரிக்கை விடுத்தாா்.
தொடா்ந்து, அணு ஆயுதங்களை உச்சகட்ட தயாா் நிலையில் வைத்திருக்கவும் ரஷ்ய ராணுவத்துக்கு அவா் உத்தரவிட்டாா். இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பேசிய அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ‘உக்ரைன் மீது ரஷ்ய அதிபா் புடின் திட்டமிட்ட தன்னிச்சையான தாக்குதலை நடத்தி வருகிறாா்.
ரஷ்யா மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடும் பொருளாதாரத் தடைகளுக்கு மாற்று மூன்றாம் உலகப் போராகத்தான் இருக்கும் என்றாா். அதிபா் ஜோ பைடனின் இந்தக் கருத்து குறித்து ரஷ்ய தலைநகா் மாஸ்கோவில் தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது குறிப்பிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ், ‘மூன்றாம் உலகப் போா் ஒன்று நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்’ என்றாா்.





