நாட்டின் நிதி நெருக்கடிகள் குறித்து நிதியமைச்சருடன் கலந்துரையாட, மத்திய வங்கி ஆளுநர் கடந்த ஆறு மாதங்களாக அழைப்பு விடுத்தும், முடியாமல்போயுள்ள தாக அமைச்சர் விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலைமை, தொண்டைக்குத் தெரியாமல் மருந்து உட்கொள்வது போலுள்ளதாகவும் அமைச்சர் கடும்தொனியில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. அரசியல் வட்டாரத்தில் இது,பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் “முழுநாடும் சரியான பாதையில்” கொள்கைப்பிரகடனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர்,இவ்வாறு தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் தெரிவித்ததாவது ; அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பங்காளிக் கட்சிகளின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்கின்றனர். இன்றைய டொலர் பிரச்சினைக்கும்,பொருளாதாரப் பிரச்சினைக்கும் தீர்வாக மத்திய வங்கி பல திட்டங்களை முன்மொழிந்திருக்கிறது.இதுகுறித்து நிதியமைச்சருடன் கலந்துரையாட ஆளுநர் அஜித்நிவால் கப்ரால் ஆறு மாதங்களாக முயற்சித்தும் முடியாமல் போயிருக்கிறது. அவர் அனுப்பிய கடிதங்களுக்கும் நிதியமைச்சிலிருந்து பதில்கள் கிடைக்கவில்லை.பொறுப்பான அமைச்சர் தான்தோன்றித்தனமாக செயல்படுவதாலே இந்நிலைமைகள்.வாகன இறக்குமதியை அனுமதித்து அதிக வரி விதித்தல், எரிபொருள் விலைகளை அதிகரித்தல்,வௌிநாட்டு வைப்புக்களுக்கு புதிய வழிகளை கண்டுபிடித்தல், வீட்டிலிருந்து வேலை செய்தல்,அரச ஊழியர்களுக்கு சுயநேர வேலையை அறிமுகம் செய்தல் என்பனவும் அதில் அடங்குவதாகவும் அமைச்சர் வீரவன்ஸ குறிப்பிட்டார்.


