திருகோணமலை – வெருகல் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தேவராசா விஜய ரகுவரன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
2022.02.23 ஆம் திகதி வர்த்தமானியில் புதிய தவிசாளராக அவரது பெயர் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவருக்கான நியமனக் கடிதத்தை வெருகல் பிரதேச சபையின் செயலாளர் கே.கே.மிகிரி சௌமியா வழங்கி வைத்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் க.சுந்தரலிங்கத்தினால் 2021.11.02 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டமும் 2021.11.29 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட இரண்டாவது பாதீடும் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு இன்றைய தினம் (03) புதிய தவிசாளர் பதவியேற்றுள்ளார்.
முன்னாள் தவிசாளர் கந்தசாமி சுந்தரலிங்கத்தினால் 2021.11.29 கொண்டுவரப்பட்ட இரண்டாவது பாதீட்டுக்கு சபையின் மொத்த 13 உறுப்பினர்களில் ஆதரவாக 06 உறுப்பினர்களும் எதிராக 07 உறுப்பினர்களும் வாக்களித்திருந்ததோடு 1 மேலதிக வாக்கினால் முன்னாள் தவிசாளரின் பாதீடு தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெருகல் பிரதேச சபையின் மொத்த 13 உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 07 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி 02, தமிழர் விடுதலை கூட்டணி 01, அகில மக்கள் காங்கிரஸ் 01, தமிழ் தேசிய மக்கள் முன்னணி 01, சிறிலங்கா சுதந்திரக் கட்சி 01 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வெருகல் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.சுந்தரலிங்கம் புதிய தவிசாளரின் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் பங்கு கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய பதவியேற்பு நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் ,வெருகல் பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







