
போர் முடிந்து பல வருடங்கள் கழிந்தும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் எம்மை நிம்மதியாக இருக்க விடுகிறார்கள் இல்லை என முன்னாள் போராளி எஸ்.கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் முன்னாள் போராளிகள் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
கொடிய பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மக்களை, குறிப்பாக இளைஞர்களை இன்று வரை விட்டு வைக்கவில்லை.
கடந்த முதலாம் திகதி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவுக்கு நான் அழைக்கப்பட்டேன் . முகநூலில் விடுதலை புலிகள் தொடர்பாக பதிவுகளை இடுவதாகவும் ,அந்த குழுவை வழி நடத்திச் செல்வதாகவும் ,என் மீது குற்றம் சாட்டப்பட்டு 3 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.2016 ஆம் ஆண்டு நான் விடுதலை செய்யப்பட்டேன்.
இன்னமும் என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர். நாம் இன வெறியர்கள் அல்ல. எல்லோரும் ஒற்றுமை பட வேண்டிய நேரத்தில் இவ்வாறு எம்மை விசாரணை என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்தை இழந்து கஸ்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
எமக்கு பேச வேண்டிய அரசியல் தலைவர்கள்,அமைப்புகள் எம்மை கை விட்டு விட்டது. ஆகவே பயங்கரவாத தடைச்ச சட்டம் நீக்கப் பட வேண்டும் என்பதற்காக மாணவர்கள் இளைஞர்கள் முன்வர வேண்டும்.
அத்துடன் இந்தியாவுடன் பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லவுள்ளதாக நாம் அறிகின்றோம். ஆகவே முதலில் இந்தியாவில விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட வேண்டும் அதற்கு இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





